கார் கண்ணாடியை உடைத்து 2 லேப்டாப், செல்போனை திருடியவர் கைது
திருவண்ணாமலையில் கார் கண்ணாடியை உடைத்து 2 லேப்டாப், செல்போனை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த வெங்கடசிவமுரளி மற்றும் ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த டாட்லா பிரித்விராஜ் ஆகிய இருவரும் நேற்று திருவண்ணாமலைக்கு தனித்தனி காரில் வந்தனர்.
பின்னர் அவர்கள் திருவண்ணாமலை நகரில் மணக்குள விநாயகர் கோவில் சிவசன்னதி ஆசிரமம் அருகே உள்ள கார் பார்க்கிங்கில் கார்களை நிறுத்தினர்.
2 காரில் அவர்களுக்கு சொந்தமான 2 லேப்டாப் மற்றும் ஒரு செல்போனை வைத்துவிட்டு அவர்கள் அருகில் உள்ள ஆசிரமங்களுக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் வந்து பார்த்தபோது கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 லேப்டாப் மற்றும் ஒரு செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக அவர்கள் திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அதில் லேப்டாப் மற்றும் செல்போனை திருடியது கீழ்நாத்தூர் பெருமாள் நகரை சேர்ந்த வெங்கடேசன் (வயது 34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை இன்று போலீசார் கைது செய்தனர்.
வழக்குப்பதிவு செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை பிடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவல்லி தலைமையிலான போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் பாராட்டினர்.