இரட்டைக்கொலை வழக்கில் கைதான மீன்பிடி தொழிலாளி சிறையில் அடைப்பு
இரட்டைக்கொலை வழக்கில் கைதான மீன்பிடி தொழிலாளி சிறையில் அடைக்கப்பட்டார்.
ராஜாக்கமங்கலம்:
இரட்டைக்கொலை வழக்கில் கைதான மீன்பிடி தொழிலாளி சிறையில் அடைக்கப்பட்டார்.
இரட்டைக்கொலை
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள முட்டம் தூய குழந்தை ஏசு தெருவை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவருடைய மனைவி பவுலின்மேரி (வயது 48). இவர்களுக்கு ஆலன் (25), ஆரோன் (19) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஆன்றோ சகாயராஜூம், ஆலனும் துபாயில் தங்கி வேலை செய்கிறார்கள். ஆரோன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
இதனால் வீட்டில் பவுலின் மேரிக்கு துணையாக அவருடைய தாயார் திரேசம்மாள் (90) வசித்து வந்தார். மேலும் பவுலின் மேரி தனது வீட்டில் தையல் வகுப்பும் நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி இரவு பவுலின் மேரியும், திரேசம்மாளும் கொலை செய்யப்பட்டு, அவர்கள் அணிந்து இருந்த 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
மீன்பிடி தொழிலாளி கைது
இந்த இரட்டைக்கொலையில் துப்பு துலக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, கடியப்பட்டணத்தை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி அமலசுமன் (36) என்பவரை கைது செய்தனர். அப்போது, 'பவுலின் மேரியிடம் தையல் பயிற்சிக்கு வந்த பெண்ணை கேலி-கிண்டல் செய்ததை, பவுலின் மேரி தட்டி கேட்டதால் தாய்-மகளை கொலை செய்தேன்' என்று அமலசுமன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் கொலைக்கு பயன்படுத்திய சுத்தியல் மற்றும் கொள்ளையடித்த நகைகளை அடகு வைத்து வாங்கிய 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ெ்காள்ளையடித்த நகைகளும் மீட்கப்பட்டன.
சிறையில் அடைப்பு
அதைத்தொடர்ந்து அமலசுமனை போலீசார் இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். ஜூலை 6-ந்தேதி வரை அமலசுமனை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து அமலசுமன் நாகர்கோவிலில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
---