விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது: தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் - விஜயகாந்த் அறிவிப்பு
அனைத்து விவசாயிகளைவும் எந்த நிபந்தனையும் இன்றி தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட்டுக்கு எதிராக போராடிய விவசாயிகள் 20 பேர் கைது என்கின்ற செய்தி மிகவும் அதிர்ச்சியும், மன வேதனையும் அளிக்கிறது. மேலும் அதைவிட மிகக் கொடுமையானது 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அனைவருக்கும் உண்ண உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதை வன்மையாக கண்டிப்பதோடு இதுவரை அரசியல் வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தது கிடையாது. விவசாயிகள் என்ன தவறு செய்தார்கள் என்பதற்காக குண்டர் சட்டம் அவர்கள் மீது பாய்ந்துள்ளது. இதை ஒட்டுமொத்தமாக நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். குண்டர் சட்டத்தில் கைதான அனைத்து விவசாயிகளைவும் எந்த நிபந்தனையும் இன்றி தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் திருவண்ணாமலையில் தே.மு.தி.க. சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.