கஞ்சா வழக்கில் கைது:போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கல்லூரி மாணவர் தப்பி ஓட்டம்சிதம்பரத்தில் பரபரப்பு


கஞ்சா வழக்கில் கைது:போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கல்லூரி மாணவர் தப்பி ஓட்டம்சிதம்பரத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர் போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்


சிதம்பரம்,

சிதம்பரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் சிலுவைபுரம் சிதம்பரம்-புவனகிரி சாலையில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அவர் ¼ கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், மேலவன்னியூர் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பூவரசன்(வயது 22) என்பதும், சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பூவரசனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கை விலங்கோடு தப்பி ஓட்டம்

பின்னர் அவரை சிதம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கிளை சிறைச்சாலையில் அடைப்பதற்காக போலீசார் வாகனத்தில் அழைத்து சென்றனர்.

இரவு 11.30 மணியளவில், வேனில் இருந்து பூவரசனை இறக்கி சிறைச்சாலைக்கு உள்ளே 2 போலீஸ்காரர்கள் அழைத்து சென்றனர். அப்போது, பூவரசன் போலீஸ்காரர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, கைவிலங்கோடு அங்கிருந்து தப்பி ஓடினார்.

உடன் போலீசார், அவரை துரத்தி சென்றனர். ஆனால், இரவு நேரம் என்பதால், இருள் சூழ்ந்த பகுதியின் வழியாக ஓடி தப்பி தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து போலீசார் நகர் பகுதி முழுவதும் தீவிரமாக தேடினர். இருப்பினும் பூவரசன் எங்கு சென்றார் என்பது தொியவில்லை. தொடர்ந்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

மடக்கி பிடித்தனர்

இதற்கிடையே மேலவன்னியூரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே மறைந்திருந்த பூவரசனை நேற்று மாலையில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கடலூரில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story