கொலை வழக்குகளில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் கைதான 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கொலை வழக்கு
கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கார்த்திக் (வயது 33), கோவில்பட்டி சிந்தாமணி நகரை சேர்ந்த வடிவேல் மகன் முத்துராஜ் (39) ஆகிய 2 பேரையும் கோவில்பட்டி கிழக்கு போலீசார் கொலை வழக்குகளில் கைது செய்தனர்.
இதே போன்று தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி மேற்கு காமராஜ் நகரை சேர்ந்த கந்தையா மகன் மனோவா ரோஸ் (25), தூத்துக்குடி தாளமுத்துநகர் சோட்டையன்தோப்பை சேர்ந்த பொன்ராஜ் மகன் துரைசாமி (25), தூத்துக்குடி அன்னை தெரசா நகரை சேர்ந்த அருள்குமார் மகன் கார்த்திக் (19) ஆகியோரை கொலை வழக்கில் வடபாகம் போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இந்த 5 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கார்த்திக், முத்துராஜ், மனோவா ரோஸ், துரைசாமி, மற்றொரு கார்த்திக் ஆகிய 5 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.
நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 13 பேர், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 37 பேர் உள்பட 205 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.