மதபோதகர் பற்றிய அவதூறு வழக்கு:நாகர்கோவிலில் கைதான கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்


மதபோதகர் பற்றிய அவதூறு வழக்கு:நாகர்கோவிலில் கைதான கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்
x

மதபோதகர் பற்றி அவதூறு வீடியோ பரப்பிய வழக்கில் நாகர்கோவிலில் கைதான கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

மதபோதகர் பற்றி அவதூறு வீடியோ பரப்பிய வழக்கில் நாகர்கோவிலில் கைதான கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அவதூறு வீடியோ

திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில அமைப்பாளருமான கனல் கண்ணன் சமீபத்தில் டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார். அதில் கிறிஸ்தவ மத போதகர் அணியும் உடையுடன் வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் இளம் பெண்ணுடன் நடனமாடும் வீடியோ, அதன் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடலும் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும், வெளிநாட்டு மத கலாசாரம் இது தான் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனை பார்த்த குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஆஸ்டின் பெனட் (வயது 54) என்பவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கனல் கண்ணன் மீது புகார் மனு அளித்தார். அதன் அடிப்படையில் கடந்த 10-ந் தேதி விசாரணைக்கு ஆஜரான கனல் கண்ணனை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கனல் கண்ணன் சிறையில் அடைப்பு

பின்னர் அவரை நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சார்பில் நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று காலை ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், கனல் கண்ணனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி தாயுமானவர், இன்று (அதாவது நேற்று) மதியம் 2 மணி முதல் மாலை 5 வரை மொத்தம் 3 மணி நேரம் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று மதியம் 12 மணிக்கு பாளையங்கோட்டை சிறையில் இருந்து கனல் கண்ணனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சைபர் கிரைம் போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில் 3 மணி நேரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

நிபந்தனை ஜாமீன்

விசாரணை முடிவடைந்ததும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக கனல் கண்ணனை அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கனல் கண்ணனை மீண்டும் ஆஜர்படுத்தினர். அப்போது அவரது தரப்பில் அளிக்கப்பட்ட ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தாயுமானவர், கனல் கண்ணனுக்கு 30 நாட்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதாவது அவர் தினமும் காலை மற்றும் மாலையில் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என தெரிவித்தார். இதற்கிடையே கோர்ட்டு வளாகத்தில் இந்து முன்னணியினர், பா.ஜனதாவினர் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story