கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்


கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்
x

கல்நார்சம்பட்டி கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில் வாலிபர் இறந்ததால் ஏற்பட்ட கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பத்தூர்

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வுகூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.

மொத்தம் 383 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய விசாரணை நடத்தி தகுதியாக இருப்பின் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

விழிப்புணர்வு

மக்கள் குறை தீர்வுக்கூட்டத்துக்கு வரும் பொதுமக்களுக்கு முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கோர்ட்டு மூலம் தீர்வுகாண வேண்டிய மனுக்கள் எல்லாம் இங்கு கொண்டு வருகின்றனர். வரும் மனுக்களில் 10 சதவீதம் மனுக்கள் தீர்க்க முடியாத பிரச்சினைகளாக இருக்கிறது. எந்த மனுக்களை இங்கு கொண்டு வர வேண்டும் என மக்களிடம் அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சொத்து பிரச்சினையை எங்களால் தீர்க்க முடியாது. அதை கோர்ட்டு மூலமாகத்தான் தீர்க்க முடியும். எனவே, அரசு அதிகாரிகள், தங்களிடம் வரும் மக்களிடம் இது பற்றி முதலில் புரிய வையுங்கள். இங்கு எந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமோ அந்த பிரச்சினைகள் குறித்து மனுக்கள் வந்தால் மட்டுமே நம்மால் சரி செய்ய முடியும். அதை செய்து விட்டால் பாதி பிரச்சினை விரைவாக தீரும் என கூறினார்.

விடுவிக்க வேண்டும்

கூட்டத்தில் தமிழக விவசாய சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் நீர்நிலைகளில் சீமைகருவேல மரங்கள் அதிகமாக உள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்டம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள்கள் பற்றாக்குறை உள்ளது. பணியில் உள்ள அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்துகின்றனர். இதனால், நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதில்லை. ஆகவே, அரசு டாக்டர்கள் அரசு மருத்துவமனையில் மட்டுமே பணி செய்ய வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

நாட்டறம்பள்ளியை அடுத்த கல்நார்சம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கடந்த மாதம் 18-ந் தேதி எங்கள் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் அங்கு கலவரம் வெடித்தது. இதில், திருவிழாவை காணவந்தவர்கள், வெளியூர் இளைஞர்கள், உள்ளூர் இளைஞர்கள் என 35 பேரை போலீசார் கைது செய்த சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

கூட்டத்தில் மனு அளித்த 2 மாற்றுத்திறனாளிகளுக்கு 40 நிமிடங்களில் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்களையும், மருத்துவ காப்பீடு திட்ட அட்டையும், கடந்த வாரம் மனு அளித்தவர்களில் 18 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளைகளையும் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.

தனித்துணை கலெக்டர் கோவிந்தன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயகுமாரி, கலால் உதவி ஆணையர் பானு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story