கடலில் 2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை: கூடங்குளம் பகுதியில் மாறுவேடத்தில் வந்த 4 பேர் சிக்கினர்
கன்னியாகுமரி கடலில் 2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. அப்போது கூடங்குளம் பகுதியில் மாறுவேடத்தில் வந்த 4 பேர் சிக்கினர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி கடலில் 2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. அப்போது கூடங்குளம் பகுதியில் மாறுவேடத்தில் வந்த 4 பேர் சிக்கினர்.
பாதுகாப்பு ஒத்திகை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடல் வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து "சாகர் க வாச்" என்ற கடல் பாதுகாப்பு ஒத்திகையை 2 நாட்கள் நடத்தினார்கள்.
கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை 28-ந்தேதிகாலை 8 மணிக்கு தொடங்கினார்கள். இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி 29-ந்தேதி இரவு 7 மணி வரை நடந்தது.
4 பேர் சிக்கினர்
கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 3 அதிநவீன ரோந்து படகுகள் மூலம் 3 குழுக்களாக பிரிந்து கடலுக்குள் சென்று தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்களா? என கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நேற்று அதிகாலை கூடங்குளம் பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகப்படும் படியாக ஒரு படகில் வந்த 4 பேர் சிக்கினர்.அவர்களை உடனடியாக மடக்கிப்பிடித்து கூடங்குளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர்கள் மாறுவேடத்தில் வந்த அதிகாரிகள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது 2 பேர் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் இந்திய கடலோர காவல் படையைச் சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் சுங்க இலாகாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
பாராட்டு
கடல் வழியாக ஊடுருவி மாறு வேடத்தில் இருந்த அதிகாரிகளை கண்காணித்து மடக்கி பிடித்த கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீனை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.