விராலிமலை முருகன் கோவிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி
விராலிமலை முருகன் கோவிலில் நவராத்திரி நிறைவு நாளையொட்டி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விராலிமலை
அம்பு எய்தல் நிகழ்ச்சி
விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து மலைமேல் உள்ள நவராத்திரி கொழு மண்டபத்தில் விதவிதமான அலங்காரங்களுடன் கூடிய கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்ற வந்தது. தினமும் முருகன் மற்றும் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமியை முன்னிட்டு நேற்று முருகபெருமாள் சமேத வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து அம்புஎய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விராலிமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவரங்குளம், அரிமளம்
திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்பாள் அரங்குளநாதர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கோவில்களிலிருந்து 7 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கு மற்றும் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மார்க்கெட் பகுதியில் உள்ள மகர் நோன்பு திடலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அம்புபோடும் நிகழ்ச்சியில் முத்துபாலடையார், அய்யனார், சிவன், முருகன், மாரியம்மன், வடைகலைபெருமாள், தென்கலை பெருமாள் ஆகிய சாமிகள் மகர்நோன்பு திடலை மூன்று முறை சுற்றி வந்த பிறகு அதிலிருந்து பூசாரிகள் மற்றும் குருக்கள் அம்பு எய்தனர். பல ஆண்டுகளுக்கு பிறகு அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாந்தநாத சாமி கோவில்
நவராத்திரி விழாவில் 10-ம் நாளான நேற்று விஜயதசமி பண்டிகையில் மகிஷாசுரன் எனும் அரக்கனை அம்மன் அழிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை சாந்தநாத சாமி கோவில் முன்பு நடைபெற்ற நிகழ்வில் லட்சுமி, சரஸ்வதி, துர்கா ஆகிய அம்மன்கள் ஒன்றாக உருவமெடுத்த அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் அரக்கனை வாழை மரம் போல சித்தரித்து, அதில் அம்பு எய்து, அரக்கனை அழிக்கும் போன்ற நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.