புழல் சிறையில் 'சிறைகளில் கலை' திட்ட தொடக்க விழா
புழல் சிறையில் ‘சிறைகளில் கலை’ திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் ரகுபதி பங்கேற்றார்.
சிறைத்துறை சார்பில் கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும், அவர்களை சீர்திருத்தம் செய்யும் வகையிலும் 'சிறைகளில் கலை' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் தொடக்க விழா புழல் சிறையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமை தாங்கினார். இந்த திட்டத்தில் சிறை கைதிகளுக்கு ஆழ்ந்த ஆழ்நிலை தியானம், யோகா, இசை, நாடகம், இலக்கியம் மற்றும் விளையாட்டு போன்ற பயிற்சிகளுடன் 6 மாத பட்டப்படிப்பும், அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்த திட்டம் படிப்படியாக அனைத்து மத்திய சிறைகளிலும் செயல்படுத்தப்படும். இதில் 700 கைதிகள் பங்கேற்றனர்.
விழாவில் சிறைத்துறை தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி, சமானச அறக்கட்டளை நிறுவனர் டி.எம்.கிருஷ்ணா, டி.ஐ.ஜி.க்கள் கனகராஜ், முருகேசன், சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சிறைத்துறை சார்பாக ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் புழல் பெண்கள் சிறை அருகே அம்பத்தூர் சாலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலமாக கட்டப்பட்டு வரும் பெட்ரோல் நிலையத்தை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். அப்போது மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் உடன் இருந்தார்.