8 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் கலைபொருட்கள் மையம்
தஞ்சை பெரிய கோவில் அருகே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மீண்டும் ஒரே இடத்தில் கலை பொருட்கள் விற்பனை மையம் அமைக்கப்படுகிறது. 8 ஆண்டுகளுக்குப்பிறகு இது அமைக்கப்படுகிறது.
தஞ்சை பெரிய கோவில் அருகே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மீண்டும் ஒரே இடத்தில் கலை பொருட்கள் விற்பனை மையம் அமைக்கப்படுகிறது. 8 ஆண்டுகளுக்குப்பிறகு இது அமைக்கப்படுகிறது.
தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தஞ்சை மாவட்டம் மட்டும் அல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த கோவிலில் மராட்டா நுழைவு வாயில் அருகே கலை பொருட்களான தலையாட்டி பொம்மை, தஞ்சை தட்டுகள் உள்ளிட்ட விற்பனை மையங்கள் செயல்பட்டு வந்தன. பெரிய கோவில் முன்பு இருந்ததால் இந்த கடைகள் அனைத்தும் பெரியகோவிலுக்கு நேர் எதிரே உள்ள வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டன.
கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன
அங்கு பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில், அங்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுதாகவும், தொல்லியல் துறைக்கு சொந்தமான இடம் என்பதால் இங்கு கடைகள் அமைக்க கூடாது, உங்களுக்கு மாற்று இடம் தருகிறோம் எனக்கூறி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் இங்கு கடைகள் வைத்திருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வந்தனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டன.இதையடுத்து இங்கு கடை வைத்திருந்தவர்களுக்கு வேறு இடங்களில், பெரிய கோவிலுக்கு சம்பந்தம் இல்லாத இடத்தில் கடை ஒதுக்குவதாக கூறப்பட்டது. அதனை வியாபாரிகள் ஏற்கவில்லை. பெரிய கோவில் அருகே கடைகள் வைத்திருந்தால் தான், சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும் என தெரிவித்தனர். மேலும் சோழன்சிலை அருகே சாலையோரத்திலும் கடைகள் வைத்திருந்தனர்.
ஒரே இடத்தில் அமைகிறது
இதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் பெரிய கோவில் அருகே கலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக மிருகவதை தடுப்பு சங்க கட்டிட அலுவலகம் இருந்த இடத்தை தேர்வு செய்து கடைகளை அமைத்துக்கொள்ளுமாறு வியாபாரிகளிடம் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது பெரிய கோவில் பாலம் அருகே தற்போது ஒரே இடத்தில் கலை பொருட்கள் விற்பனை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.இங்கு தலையாட்டி பொம்மை, டான்சிங் டால், கலைத்தட்டுகள் மற்றும் பல்வேறு பொம்மைக்கடைகள் என 34 கடைகள் இடம் பெறுகின்றன. 8 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த கடைகள் மீண்டும் ஒரே இடத்தில் அமைய உள்ளது. பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் ஒரே இடத்திற்கு வந்து பொருட்களை வாங்கும் வகையிலும், அவர்களை கவரும் வகையிலும் இந்த கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த கடைகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.