ஏற்காடு கோடை விழாவில் அடுத்த ஆண்டு செயற்கை நீரூற்று


ஏற்காடு கோடை விழாவில் அடுத்த ஆண்டு செயற்கை நீரூற்று
x
சேலம்

ஏற்காடு:-

ஏற்காடு கோடை விழாவில் அடுத்த ஆண்டு செயற்கை நீரூற்று அமைக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

ஏற்காடு கோடை விழா

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 21-ந் தேதி தொடங்கிய கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்.

விழாவில் கலெக்டர் கார்மேகம் பேசும் போது கூறியதாவது:-

ஏற்காடு கோடை விழா 8 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதனை காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர். அதாவது சுமார் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

செயற்கை நீரூற்று

ஏற்காடு ஏரியில் வண்ண விளக்குகளுடன் கூடிய நீர் ஊற்று அமைக்கப்பட உள்ளது. இந்த நீரூற்று அடுத்த ஆண்டு கோடைவிழாவில் இடம் பெறும். இந்த கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைந்து பணியாற்றிய ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கலெக்டர் கார்மேகம் பேசினார்.

தொடர்ந்து, புகைப்பட போட்டி, வீட்டு தோட்டம், மாடி தோட்டம், காய்கறி வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் வருவாய் கோட்டாட்சியர் மாறன், தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி, ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புராஜன், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story