கலைஞர் கோட்டம் இன்று திறப்பு: பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் திறந்துவைக்கிறார்
திருவாரூரில் ரூ.12 கோடியில் ஆழித்தேர் வடிவில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது. விழாவில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கலந்து கொண்டு கலைஞர் கோட்டத்தை திறந்துவைக்கிறார்.
திருவாரூர்,
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி அவரது நினைவாக திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
ஆழித்தேர் வடிவில்
7 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ள இந்த கலைஞர் கோட்டத்தில் கருணாநிதி சிலை, முத்துவேலர் நூலகம், கருணாநிதியின் நினைவுகளை போற்றக்கூடிய பழைய புகைப்படங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. மேலும் 2 திருமண மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன.
திருவாரூர் என்றாலே சட்டென நினைவுக்கு வருவது ஆழித்தேர் தான். திருவாரூரின் சிறப்பை குறிக்கக்கூடிய வகையில் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று திறப்பு விழா
இந்த கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடக்கிறது. விழாவில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கலந்து கொண்டு கலைஞர் கோட்டத்தை திறந்துவைக்கிறார். முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் திறந்துவைக்கிறார்.
கருணாநிதி உருவச்சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார்.
அங்கிருந்து அவர், காரில் திருவாரூர் வந்தார். திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது இல்லத்தில் அவர் தங்கினார்.
ஆய்வு
நேற்று காலை சன்னதி தெருவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டார். முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அந்த மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், காரில் புறப்பட்டு காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்திற்கு சென்றார்.
அங்கு கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கலைஞர் கோட்டத்திற்குள் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் ஒவ்வொரு பழைய புகைப்படங்களையும் பார்த்தார்.
நெகிழ்ச்சி அடைந்தார்
கருணாநிதியின் இளமைக்கால அரசியல் பொதுவாழ்வு பணிகள் குறித்த புகைப்படங்கள், பெரியார், அண்ணா மற்றும் திராவிட இயக்க தலைவர்களோடு கருணாநிதி ஆற்றிய அரசியல் பணிகள் குறித்த புகைப்படங்கள், கருணாநிதி பயன்படுத்திய பொருட்கள், அவர் எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தனது தந்தைக்காக அதுவும் சொந்த ஊரில் கலைஞர் கோட்டம் அமைத்து இருப்பதை பார்த்து மு.க.ஸ்டாலின் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தார். காலை 9.55 மணிக்கு கலைஞர் கோட்டத்திற்குள் சென்ற அவர், நண்பகல் 12 மணி வரை சுமார் 2 மணி நேரம் பார்வையிட்டார்.
ஆலோசனை
கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கு வரும் பீகார் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியை வரவேற்பது குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அதே நேரம் சென்னையில் பெய்து வரும் கனமழை குறித்தும் மழைநீர் தேங்காமல் உடனடியாக வடிய வைக்கும் பணிகள் குறித்தும் திருவாரூரில் இருந்தபடியே கேட்டறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மழைநீரை விரைந்து வடிய வைப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
பின்னர் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்காக அமைக்கப்பட்டு உள்ள பிரமாண்ட பந்தலையும், விழா மேடையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அமைச்சர்கள்
இந்த ஆய்வின்போது தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மதிவாணன் மற்றும் நிர்வாகிகள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.