கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்று வருகிறது. அதன்படி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு கோ பூஜை, பள்ளியறை பூஜை நடந்தது.
தொடர்ந்து அலங்கார மண்டபத்தில் நடராஜர், சிவகாமி அம்மன் மற்றும் மாணிக்கவாசகர் எழுந்தருளினர். அங்கு சாமிகளுக்கு 21 விதமான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. காலை 7.30 மணி அளவில் புனித நீர் அடங்கிய கலச அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன், பிடாரி அம்மன் ஆகியோருக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
ஆருத்ரா தரிசனம்
மதியம் 12 மணி அளவில் நடராஜர் பெருமானுக்கு தயிர் சாதம் படைத்து சோடச உபசாரங்களுடன் தீபாராதனை நடந்தது. அதையடுத்து அலங்கார மண்டபத்தில் இருந்து ஆனந்த நடனமாடி நடராஜரும், சிவகாம சுந்தரி அம்பாளும் பக்தர்களுக்கு காட்சி அளித்தபடி வந்தனர். தொடர்ந்து கோபுர தரிசனமும் நடந்தது.
அதன்பிறகு வெள்ளி விமானங்களில் நடராஜர், சிவகாமசுந்தரி, மாணிக்கவாசகர் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தனர். தொடர்ந்து சிவகர குளத்தில் தீர்த்தவாரி முடிந்து, நடராஜர் திருக்கல்யாணம் கோபுர வாசலில் ந டந்தது. தொடர்ந்து சபைக்குள் நடராஜர் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.