'ஆருத்ரா கோல்டு' நிறுவன ஊழியர் ரூ.1 கோடி கேட்டு கடத்தல்


ஆருத்ரா கோல்டு நிறுவன ஊழியர் ரூ.1 கோடி கேட்டு கடத்தல்
x

குடியாத்தம் அருகே ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன ஊழியர் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்டார். அவரை 5 நாட்களுக்கு பிறகு போலீசார் மீட்டனர். கடத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

குடியாத்தம் அருகே ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன ஊழியர் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்டார். அவரை 5 நாட்களுக்கு பிறகு போலீசார் மீட்டனர். கடத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆருத்ரா கோல்டு நிறுவன ஊழியர்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பரதராமி ஊராட்சி ஆந்திர தாசராபல்லி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 45). ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்த இவர் பரதராமியில் மளிகைக் கடை நடத்தி வந்தார். இவர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என சுற்றுப்புற கிராம மக்களிடம் கூறியுள்ளார். இதனை நம்பி பலர் பலகோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி முதல் தாமோதரனை காணவில்லை. இதனால் அவரது மனைவி மகாலட்சுமி தனது கணவரை யாராவது கடத்திச் சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பரதராமி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தாமோதரன் காணாமல் போனது குறித்தும், ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்த தகவல் குறித்தும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரூ.1 கோடி கேட்டு கடத்தல்

தாமோதரன் காணாமல் போனது குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சத்யபிரியா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தாமோதரன் காணாமல் போனாரா அல்லது கடத்திச் செல்லப்பட்டாரா என்பது குறித்து தனிப்படை போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். அவரது செல்போன் சிக்னல்களைக் கொண்டு பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று காலையில் தாமோதரனின் மனைவி மகாலட்சுமியை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தாமோதரனை கடத்தி வைத்துள்ளதாகவும், ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் விடுவிப்பதாகவும், இல்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.

போலீசார் மீட்டனர்

உடனடியாக மகாலட்சுமி இந்த தகவலை போலீசாருக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனிப்படையினர் தாமோதரன் இருக்கும் இடம்குறித்து அறிந்து, அவரது மனைவியுடன் சென்று குடியாத்தம் அடுத்த சைனகுண்டா பகுதியில் தாமோதரனை மீட்டனர். அவரை கடத்தி வைத்திருந்ததாக சுரேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து பரதராமி போலீஸ் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

முதலீடு செய்தவர்கள்

கடத்தப்பட்ட தாமோதரன் காட்பாடியில் உள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் கணக்காளராக வேலையில் இருந்துள்ளார். அவரை நம்பி பலர் பல கோடி ரூபாய் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இதில் தாமோதரனுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு ஆயிரம் ரூபாய் என கமிஷன் தந்துள்ளனர். பின்னர் இந்த நிறுவனம் மோசடி நிறுவனம் என தெரியவந்தது. தாமோதரன் மூலமாக அவரது உறவினர் ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த சிறுசேரி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (30) என்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் ரூ.23 லட்சம், சித்தூர் மாவட்டம் குடிப்பாலா அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (32) என்பவர் ரூ.7 லட்சமும் முதலீடு செய்துள்ளனர்.

ஆருத்ரா நிறுவனம் மோசடி செய்தவுடன் அந்த பணத்தை திருப்பி வாங்கி தருமாறு தாமோதரனை அவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் சாக்குபோக்கு சொல்லி பணத்தை வாங்கித் தரவில்லை. இதனால் கடந்த 12-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ரத்தினகிரி கோவிலுக்கு சென்று விட்டு வரும்போது தாமோதரனை எல்லை பாதுகாப்பு படை வீரர் ரமேஷ், சுரேஷ், மற்றும் ராஜ்குமார் ஆகியோர் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

2 பேர் கைது

நேற்று காலையில் கடத்தல்காரர்கள் தாமோதரன் மனைவி மகாலட்சுமியை தொடர்புகொண்டு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் உங்கள் கணவரை விட்டு விடுவதாகவும் குடியாத்தத்தில் இருந்து பலமநேர் செல்லும் சாலையில் ஆந்திர மாநில எல்லையில் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்பேரில் மோட்டார் சைக்கிளில் உறவினர் ஒருவருடன் மகாலட்சுமியிடம் போலியாக பணப்பை கொடுத்து அனுப்பி வைத்தனர். அந்த மோட்டார் சைக்கிளுக்கு முன்னதாக சாதாரண உடையில் ஒரு காரிலும், பின் தொடர்ந்து ஒரு காரிலும் போலீசார் சென்றனர்.

ஆந்திர மாநில எல்லையில் உள்ள சைனகுண்டா பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்றிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்த போது தாமோதரனை கடத்திய நபர்கள் என தெரிய வந்தது. அப்போது எல்லை பாதுகாப்பு படை வீரர் ரமேஷ் தப்பி ஓடிவிட்டார். சுரேஷ், ராஜ்குமாரை போலீசார் கைது செய்து தாமோதரனை உயிருடன் மீட்டனர்.

இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடத்திச் செல்லப்பட்ட தாமோதரனை உயிருடன் மீட்ட தனிப்படையினரை வேலூர் சரக டி.ஐ.ஜி.(பொறுப்பு) சத்யபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் பாராட்டினார்கள்.


Next Story