ஆறுமுகநேரியில் பரபரப்பு:ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வலம் வந்த 4 பேர் சிக்கினர்
ஆறுமுகநேரியில் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வலம் வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் வலம் வந்த 4 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைதுசெய்தனர். அவர்கள் வசதியானவர்களின் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.
போலீசார் ரோந்து
ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல் பாண்டியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவில் ரோந்து சுற்றி வந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளரில் காயல்பட்டினம் பைபாஸ் ரோடு விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், காயப்பட்டினம் பைபாஸ் வழியாக சென்று பேயன்விளை பொன்மாடசாமி கோவிலை கடந்து தர்மகுட்டி சாஸ்தா கோவில் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது வழியில் அதிகாரிகள் குடியிருப்பு பகுதியான எஸ்.ஆர்.எஸ். கார்டன் காம்பவுண்டுக்கு வெளியே மோட்டார் சைக்கிளுடன் 5 மர்ம நபர்கள் நடமாடி கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓடினர். போலீசார் நீண்டதூர துரத்தி சென்று 4 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட 4 பேரிடமும் அரிவால், கத்தி, இரும்பு ராடு போன்ற ஆயுதங்கள் இருந்தன.
வீடுகளில் கொள்ளையடிக்க திட்டம்
அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி 3-வது மைல்.எப்.சி.ஐ.சி குடோன் பகுதி காளி என்ற காடை காளி(22), ஆறுமுகநேரி கமலா நேரு காலனி கோபால் மகன் சஞ்சய் குமார்(21), அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் பெருமாள்(23), ஸ்பிக்நகர் பாரதி நகர் 3-வது தெரு பாலசுப்ரமணியன் மகன் சங்கர் கணேஷ்(24) என்பதும்,
தப்பி ஓடியவர் புதுக்கோட்டை பிரகாஷ் நகர் தங்கமணி மகன் சுடலைமுத்து( 23) என்றும் தெரிய வந்தது. தொடர் விசாரணையில், இவர்கள் எஸ்.ஆர். எஸ். கார்டனில் ஏற்கனவே நோட்டமிட்டு வைத்திருந்த பூட்டி கிடந்த வீடுகளில் கொள்ளை அடிப்பதற்காக ஆயுதங்களுடன் வந்தபோது சிக்கி கொண்டதாக' தெரிவித்தனர்.
பழைய குற்றவாளிகள்
இதுகுறித்து ஆறுமுகநேரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சும், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அந்த 4 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய சுடலைமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த 4 பேரும் பழைய குற்றவாளிகள் என கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் வேறு எங்கும் வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுதங்களுடன் 4 முன்னாள் குற்றவாளிகள் பிடிபட்ட சம்பவம் ஆறுமுகநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.