அருணாசலேஸ்வரர் கோவிலில் கலெக்டர் திடீர் ஆய்வு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கலெக்டர் முருகேஷ் திடீரென ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கலெக்டர் முருகேஷ் திடீரென ஆய்வு செய்தார்.
பக்தர்கள் கூட்டம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பொது தரிசன வழி கோவில் அருகில் தென் மற்றும் வட ஒத்தவாடை தெருவில் தொடங்கி ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் வழியாக சென்று சாமி சன்னதியை அடைந்தது.
இதில் வரிசையில் நின்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் கோவிலில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பணிகள் மற்றும் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்ய மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது திடீரென மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுடன் இணைந்து கோவிலில் ஆய்வு பணியை மேற்கொண்டார்.
மேலும் பாதுகாப்பு பணிகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசாரிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
மேலும் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்ய மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கோவில் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் நிற்காமல் விரைந்து சாமி தரிசனம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கலெக்டரின் திடீர் ஆய்வால் கோவிலில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.