அருணாசலேஸ்வரர் கோவில் கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்


அருணாசலேஸ்வரர் கோவில் கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்
x

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலின் கோபுரங்கள் தீயணைப்புத் துறையினர் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

திருவண்ணாமலை

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலின் கோபுரங்கள் தீயணைப்புத் துறையினர் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும்.

விழா நாட்களில் காலை மற்றும் இரவில் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் சாமி வீதியுலா நடைபெறும்.

தொடர்ந்து 7-ம் நாள் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் நடைபெறும்.

விழாவின் சிகர நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 6-ந் தேதி அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற தீபத் திருவிழா இந்த கட்டுப்பாடுகள் தளர்வுடன் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இதனால் தீபத் திருவிழாவிற்கு இந்த ஆண்டு 40 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு கோவிலில் வாகனங்கள் சீரமைக்கும் பணி, மின்விளக்குகள் பொருத்தும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணி

அதன் ஒரு பகுதியாக அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் உள்ளே வந்து செல்லும் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய 4 கோபுரங்களும் சுத்தம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி இன்று காலை தீயணைப்பு துறையின் மூலம் சென்னை மத்திய மாவட்டத்தில் இருந்து அதிநவீன உயர் நீட்டிப்பு ஏணியை கொண்ட தீயணைப்பு மீட்பு எந்திர வாகனத்தின் (பிராண்டோ ஸ்கை லிப்ட்) மூலம் கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

இதில் சென்னை மத்திய மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சரவணன் தலைமையிலான 10 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்த வாகனத்தின் மூலம் 54 மீட்டர் உயரம் வரை செல்லும் அதாவது 162 அடி உயரத்திற்கு மேல் செல்ல கூடிய இந்த வாகனத்தின் மூலம் தீயணைப்பு வீரர்கள் கோபுரத்தின் உச்சி வரைக்கும் சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து கோபுரங்களை சுத்தம் செய்தனர்.

இந்த பணியினை பொதுமக்கள் நேரில் கண்டு ரசித்தனர்.


Next Story