ஆவின் முகவர்கள் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்


ஆவின் முகவர்கள் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்
x

ஆவின் பால் பாக்கெட்டுகளில் கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து தினத்தந்தி செய்தி எதிரொலியாக, ஆவின் முகவர்கள் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று அதிகாரி தெரிவித்து உள்ளார்.

நீலகிரி

கோத்தகிரி,

ஆவின் பால் பாக்கெட்டுகளில் கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து தினத்தந்தி செய்தி எதிரொலியாக, ஆவின் முகவர்கள் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று அதிகாரி தெரிவித்து உள்ளார்.

முகவர்களுக்கு நஷ்டம்

கோத்தகிரி பகுதிக்கு ஊட்டியில் இருந்து ஆவின் பால் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வினியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் முறையாக பேக்கிங் செய்யப்படாததால், பால் கசிந்து வீணாகியது. இதனால் முகவர்கள் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கவலை தெரிவித்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து கோத்தகிரி பகுதியில் உள்ள ஆவின் முகவர்கள் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருந்தால் ஆவின் நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து ஊட்டி ஆவின் பால் நிறுவன மேலாளர் சிவசங்கர் கூறியதாவது:-

குறைகள் தெரிவிக்கலாம்

நீலகிரி மாவட்டம் முழுவதும் வினியோகம் செய்வதற்காக ஒரு நாள் முன்னதாக மாலைக்குள், பால் பாக்கெட்டுகள் முறையாக பேக்கிங் செய்யப்பட்டு குளிரூட்டும் அறையில் வைக்கப்படுகிறது. பின்னர் அதிகாலையில் பால் பாக்கெட்டுகளில் கசிவு உள்ளதா என மீண்டும் சோதனை செய்யப்பட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு முகவர்கள் முன்னிலையில் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.

மேலும் பால் பாக்கெட்டுகளில் கசிவுகள் இருப்பின் மாற்றி கொடுப்பதுடன், அதிக பாக்கெட்டுகளில் கசிவுகள் இருந்தால் அதற்கான தொகையை கழித்து வசூலிக்கப்படுகிறது. ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் இருந்து அனுப்பப்படும் பால் முகவர்களை சென்றடையும் வரை நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. பால் பாக்கெட்டுகளில் கசிவு ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, முகவர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story