ஆவின் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
நெல்லையில் ஆவின் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
நெல்லையில் ஆவின் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம்
நெல்லை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் (ஆவின்) அனைத்து ஊழியர்கள் கூட்டமைப்பினர் நெல்லை ரெட்டியார்பட்டி ஆவின் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர் இம்மானுவேல் தலைமை தாங்கி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
தமிழ்நாடு அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வு 7 சதவீதம் உடனே வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு எந்த ஊக்கத்தொகையும் வழங்கவில்லை. சென்னை ஆவினில் பணியாற்றுவோருக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கும் உடனே ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஆவின் பால் விலையை அந்தந்த ஒன்றியங்களே நிர்ணயம் செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தொடர் போராட்டம்
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் இம்மானுவேல் கூறுகையில், ''நெல்லை ஆவின் ஊழியர்களுக்கு அரசு அறிவித்த 7 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். இதுதொடர்பாக கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினோம் தற்போது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இன்னும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையெனில் நெல்லை வண்ணார்பேட்டையில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மனு கொடுப்போம். அப்படி இருந்தும் கோரிக்கையை நிறைவேற்றவில்லையெனில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம்'' என்றார்.