எடப்பாடி பழனிசாமி கையில் இருக்கும் வரை இரட்டை இலை பலவீனமாகும்:"உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைந்து ஜெயலலிதாவின் கட்சியை மீட்டெடுப்போம்"தேனி பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேச்சு
எடப்பாடி பழனிசாமி கையில் இருக்கும் வரை இரட்டை இலை பலவீனமாகிக் கொண்டே போகும் என்றும், உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜெயலலிதாவின் கட்சியை மீட்டெடுப்போம் என்றும் தேனியில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
அ.ம.மு.க. பொதுக்கூட்டம்
தேனி பங்களாமேட்டில் அ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
தேனி மாவட்டம் என்பது, எம்.ஜி.ஆரை முதல்-அமைச்சராக்கிய மாவட்டம். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, ஜெயலலிதாவின் அரசியல் ஆரம்பித்ததே தேனி மாவட்டத்தில் தான்.
அதன்பிறகு 1991-ல் இந்த தொகுதியில் ஜெயலலிதா என்னை நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்திய போது என்னை மாபெரும் வெற்றி பெற வைத்தீர்கள். 2004-ல் தமிழகத்தில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். உடனே அடுத்த மாதமே என்னை ராஜ்யசபா எம்.பி. ஆக ஜெயலலிதா ஆக்கினார். என்னோடு சேர்ந்து இன்னொருத்தரையும் ஜெயலலிதா எம்.பி. ஆக்கினார். ஆனால், அவர் இப்போது வேறு பக்கம் சென்று விட்டார்.
அரசியல் சதி
உங்களில் ஒருவனாக இருந்த என்னை, இன்றைக்கு ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக தயார்படுத்தி இருக்கிறீர்கள். ஆர்.கே.நகரில் தி.மு.க.வை வீழ்த்திய சின்னம் நம்முடைய குக்கர் சின்னம். துரோகிகளை ஜெயலலிதாவின் தொகுதியிலேயே வீழ்த்திய சின்னம் குக்கர் சின்னம்.
பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அரசியல் சதியால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். 2021-ல் நடந்த தேர்தலிலும் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அந்த அரசியல் சதிகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வரும் காலங்களில் அ.ம.மு.க. தமிழகம் முழுவதும் வெற்றி பெறும் என்கிற செய்தி வரும் வரை நாம் உழைக்க வேண்டும்.
கஜினி முகமது போல்...
நான் எதற்கும் பயப்பட மாட்டேன். கடவுளை தவிர யாரைக் கண்டும் பயப்படுவது இல்லை. யாருக்கும் துரோகம் செய்யவில்லை. என்னுடன் நிற்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் பிம்பங்கள். நீங்கள் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் நம்மை அசைத்து பார்க்க முடியாது.
இது தானாக வளர்ந்து வரும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் அசைத்து விட முடியாது. நாங்கள் கஜினி முகமது போல் போர் நடத்தி இலக்கை அடையும் வரை ஓய மாட்டோம்.
இடைக்கால தீர்ப்பு
ஒரு கட்சி நடத்திய பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வந்துள்ளது. அது ஒரு இடைக்கால தீர்ப்பு. இதுக்கு அப்புறம் இன்னும் எத்தனையோ கட்டம் இருக்கிறது.
எம்.ஜி.ஆருக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை தட்டிக் கேட்டு உருவாக்கிய இயக்கம் தான் அ.தி.மு.க. ஒரு துரோகி, துரோகம் செய்தே தலைவரின் இடத்தை பிடித்து விடலாம் என்று இன்றைக்கு நீதிமன்றம் வாயிலாக அலைந்து கொண்டிருக்கிறார். துரோகத்தை எதிர்த்து தொடங்கிய இயக்கத்தில் இன்றைக்கு துரோகத்தை தவிர வேறு எதுவும் செய்யாத ஒருவர் பொதுச்செயலாளர் பதவியை அடைய துடித்துக் கொண்டு இருக்கிறார். அதை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆன்மா மன்னிக்காது. அவருக்கு காலம் தக்கப் பாடம் கற்பிக்கும்.
அனைவரும் ஒன்றிணைவோம்
எடப்பாடி பழனிசாமியை ஆளுமைமிக்கவர் என்று சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். இன்றைக்கு தி.மு.க. பெரும்பான்மையோடு, மிருக பலத்தோடு ஆட்சி செய்ய காரணமே எடப்பாடி பழனிசாமி தான். ஆட்சி அதிகாரம், கூட்டணி பலம் இருந்தும் அவரால் ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை.
எடப்பாடி கையில் இரட்டை இலை இருக்கும் வரை அது பலவீனமாகிக் கொண்டே போகும். காலம் வரும், தொண்டர்கள் அனைவரும் வெகுண்டு எழுவார்கள். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவோம். அன்றைக்கு மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டு வருவோம்.
கட்சியை மீட்டெடுப்போம்
மக்களை ஏமாற்றும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சியாக திகழ்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க வாய்ப்பு இருந்தும், தன்னை கைது செய்து விடக்கூடாது என்று பயந்து கொண்டு தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவின் தொண்டர்களை பலவீனப்படுத்தும் வகையில் பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அவருக்கு போட்டி தி.மு.க. கிடையாது. டி.டி.வி.தினகரனும், பன்னீர்செல்வமும் தான்.
ஏதோ இந்த தேர்தலில் ஒரு மாயக்கரம் அவர்களை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது. வரும் காலத்தில் உங்களை வீழ்த்தாமல் நாங்கள் ஓயமாட்டோம். துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. சரியான நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள்.
ஜெயலலிதாவின் கட்சியை மீட்டெடுப்போம் என்பது தான் நமக்கு தாரக மந்திரம். குறுக்கு வழியில் அல்ல, ஜனநாயக முறைப்படி ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்டெடுப்போம். அதற்காக உருவானது தான் அ.ம.மு.க.. தேர்தலில் நாம் வெற்றி பெற முடியாமல் போயிருக்கலாம். வரும் காலத்தில் மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்று ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் நாம் தான் என்று நிரூபிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்