2-ம் நிலை காவலர் தேர்வை 6,228 பேர் எழுதினர்


திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற 2-ம்நிலை காவலர் தேர்வை 6,228 பேர் எழுதினர். தேர்வு மையங்களை கூடுதல் டி.ஜி.பி. பாலநாகதேவி பார்வையிட்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற 2-ம்நிலை காவலர் தேர்வை 6,228 பேர் எழுதினர். தேர்வு மையங்களை கூடுதல் டி.ஜி.பி. பாலநாகதேவி பார்வையிட்டார்.

2-ம் நிலை காவலர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை காவலர்கள், 2-ம் நிலை சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூரில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரி மற்றும் ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களிலும், வாணியம்பாடியில் மருதர் கேசரி மகளிர் கல்லூரி, பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி, இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆகிய 6 மையங்களில் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 7,318 பேர் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 6,228 பேர் மட்டும் நேற்று தேர்வு எழுதினர். 1,090 பேர் தேர்வு எழுதவில்லை.

ஒரு கிலோமீட்டர் தூரம்

வாணியம்பாடி இஸ்லாமிய பெண்கள் கலைக்கல்லூரியில் மட்டும் 1,315 பெண்கள் தேர்வு எழுத வந்தனர். இவர்கள் போலீசாரின் பரிசோதனைக்கு பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படனர். இவர்கள் தேர்வு மையத்திற்குள் செல்ல சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்தனர். மேலும் திருநங்கை ஒருவரும் தேர்வு எழுத வந்தார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். தேர்வு மையங்களை தமிழக அமுலாக்க பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பாலநாகதேவி, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.


Next Story