நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைப்படி முதியோர் கட்டண சலுகையை உடனடியாக வழங்க வேண்டும் -வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்


நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைப்படி முதியோர் கட்டண சலுகையை உடனடியாக வழங்க வேண்டும் -வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்
x

ரெயில்களில் முதியோர்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரையின் படி உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை


ரெயில்களில் முதியோர்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரையின் படி உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்டண சலுகை

கொரோனா பரவல் என்ற பெயரில் ரெயில்களில் வழங்கப் படும் அனைத்து பிரிவினருக்கான டிக்கெட் கட்டண சலுகையை ரெயில்வே நிறுத்தி வைத்து உள்ளது. இதில், முதியவர்களுக்கான சலுகையில், 58 வயதான பெண் முதியவர்களுக்கு 50 சதவீதமும், 60 வயதான ஆண் முதியவர்களுக்கு 40 சதவீதமும் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டது. ஆனால், முதியோர் கட்டண சலுகை வழங்காததன் மூலம் ரெயில்வேக்கு குறிப்பிட்ட செலவுத்தொகை மிச்சமாகி உள்ளதாக ரெயில்வே தரப்பில் கூறப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அதனை தொடர்ந்து, முதியோருக்கான டிக்கெட் கட்டண சலுகையை மீண்டும் வழங்க நாடாளுமன்ற ரெயில்வே நிலைக்குழு பரிந்துரைத்தது. அதனை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி மதுரை எம்.பி. வெங்கடேசன் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா காலத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த முதியவர்கள் பயணத்தை தவிர்ப்பதற்காக டிக்கெட் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது.

தற்போது, 200 கோடி பேருக்குமேல் தடுப்பூசி போடப்பட்டு, நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, முதியோருக்கான கட்டண சலுகையை வழங்க வேண்டும் என்று எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கட்டண சலுகை வழங்குவது சாத்தியமில்லை என்று ரெயில்வே அமைச்சகம் கூறி வருகிறது.

நிலைக்குழு பரிந்துரை

நாட்டில் உள்ள 14 கோடியே 43 லட்சம் முதியோர்களில் 12 சதவீதம் பேருக்கு மட்டுமே சமூக பாதுகாப்பு உள்ளது. மீதமுள்ள 88 சதவீதம் பேர் தங்களது பிள்கைளை நம்பி வாழ்கின்றனர். மருத்துவ சிகிச்சை, புனித யாத்திரைக்காக முதியோர்கள் ரெயில்களில் செல்கின்றனர். அவர்களுக்கான கட்டண சலுகையை மறுப்பது அநீதியாகும். ஒரு சில நாடுகளில் முதியோர்களுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது.

இதற்கிடையே கடந்த ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி பா.ஜ.க.வின் உதவித்தலைவர் ராதாமோகன் சிங் தலைமையிலான ரெயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது 12-வது அறிக்கையில் 14-வது பரிந்துரையில், முதியோர் கட்டண சலுகையை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என பரிந்துரைப்பதாக தெரிவித்து உள்ளது. எனவே, முதியோர்களுக்கு உடனடியாக சலுகை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Next Story