நாளை நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் மகள் காதலனுடன் சென்றதால் தம்பதி தற்கொலை கடலூர் அருகே சோகம்
கடலூர் அருகே நாளை(ஞாயிற்றுக்கிழமை) நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் மகள் காதலனுடன் சென்றதால் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
கடலூர் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள வேளங்கிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(வயது 65), விவசாயி. இவருடைய மனைவி சுமதி(50). இவர்களுடைய மகள் புஷ்பரோகிணி(19). இவர் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு வேதியியல் படித்து வருகிறார்.
இவருக்கும், பெரியாண்டிக்குழி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு நாளை(ஞாயிற்றுக்கிழமை) நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இதற்காக இருவீட்டாரும் ஏற்பாடுகளை கவனித்து வந்தனர்.
காதலனுடன் ஓட்டம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் புஷ்பரோகிணி கல்லூரிக்கு சென்றுவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர் கல்லூரி முடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அவரது குடும்பத்தினர், புஷ்பரோகிணியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது புஷ்பரோகிணி வேளங்கிப்பட்டு கிராமத்தை சேர்ந்த 24 வயதுடைய வாலிபரை காதலித்து வந்ததும், திருமணத்தில் விருப்பம் இல்லாததால் காதலனுடன் சென்றதும் தெரியவந்தது. இதையறிந்த சுந்தரமூர்த்தியும், சுமதியும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுபற்றி வெளியே தெரிந்தால் ஊர் மக்கள் கேவலமாக பேசுவார்களே என்றும், மகள் இப்படி செய்து விட்டாலே என்றும் மனவேதனை அடைந்தனர். இதில் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தனர்.
தற்கொலை
அதன்படி நேற்று காலை சுந்தரமூர்த்தி, சுமதி ஆகியோர் அதே பகுதியில் உள்ள சேகர் என்பவருக்கு சொந்தமான வயலுக்கு சென்றனர். அங்கு இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்த சுந்தரமூர்த்தி, சுமதி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் காதலனுடன் சென்றதால் மனமுடைந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.