எதிர்பார்த்த மழை பெய்யாததால்வைகை அணையில் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு இல்லை:அதிகாரிகள் அறிவிப்பால் விவசாயிகள் கவலை
எதிர்பார்த்த மழை பெய்யாததால் வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர். இதனால் 5 மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வைகை அணை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்குகிறது. அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.
இதேபோல் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2-ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறப்பது வழக்கம். இதன்மூலம் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். முதல் போக பாசனத்திற்காக ஜூன் முதல் வாரத்தில் இருந்து 120 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்தது.
முதல்போக பாசனம்
இதனால் வைகை அணையில் போதுமான நீர் இருப்பு இருந்ததால் ஜூன் 2-ந்தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் அணையின் நீர்மட்டம் குறைவாகவே இருந்தது. பெரிதும் எதிர்பார்த்த தென்மேற்கு பருவமழை இதுவரை பெய்யவே இல்லை. இதன் காரணமாக இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை.
தென்மேற்கு பருவமழை தொடங்கி 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை கைகொடுக்காததால் இந்த ஆண்டு முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் 5 மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதற்கிடையே நேற்று அணையின் நீர்மட்டம் 48 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.