விருத்தாசலம்குறைகேட்பு கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் விவசாயிகள் அதிர்ச்சி சப்-கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
விருத்தாசலம் குறைகேட்பு கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் சப்-கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு சப்-கலெக்டர் (பொறுப்பு) லூர்துசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை குறித்து பேசினர். அதன் விவரம் வருமாறு:-
பரவலூர் தங்க தனவேல் :- சென்னை-கன்னியாகுமாரி இடையே தொழில் தட சாலை திட்டத்தில் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சாலை அகலப்படுத்தும் பணி என்றால் 30 அடி சாலையை 35 அடியாகவோ அல்லது 40 அடியாகவோ மேம்படுத்த வேண்டும். ஆனால் இங்கு 30 அடி சாலையை 25 அடி சாலையாக அமைத்து வருகின்றனர். இதனால் விருத்தாசலம் நகர பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. விருத்தாசலம் நகராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மணிமுக்தாற்றில் தேங்கி நிற்பதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விட வேண்டும்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
இந்த கோரிக்கைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க பெரும்பாலான அதிகாரிகள் கூட்டத்துக்கு வரவில்லை. இது போன்ற கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் அதிகாரிகள் வரவில்லை. எனவே எங்கள் குறைகளை நாங்கள் யாரிடம் சொல்வது. எனவே கூட்டத்துக்கு வராத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது இதே கோரிக்கையை வலியுறுத்தி மற்ற விவசாயிகளும் குரல் எழுப்பியதோடு, சப்-கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சப்-கலெக்டர் லூர்துசாமி, கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு உடனடியாக வருமாறு உத்தரவிட்டார். இதன் காரணமாக கூட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வனத்துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட ஒரு சில அதிகாரிகள் வந்தவுடன் மீண்டும் கூட்டம் தொடங்கியது. அதனை தொடர்ந்து சாலை அகலப்படுத்தும் பணி சம்பந்தமாக புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சப்-கலெக்டர் தெரிவித்தார்.
நடவடிக்கை
புதுக்கூரைப்பேட்டை கே என் கலியபெருமாள்:- காட்டு பன்றிகள் மற்றும் குரங்குகளால் எங்களது விவசாய பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுங்கள். இல்லையென்றால் எங்கள் நிலத்தை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்றார். அதற்கு சப்-கலெக்டர் லூர்துசாமி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதேபோல் விவசாயிகள் பலர் தங்களது கோரிக்கை குறித்து பேசினர்.