ஆறுமுகநேரி அருகே மின்கம்பி தாழ்வாக தொங்கியதால் சென்னை, நெல்லை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்


ஆறுமுகநேரி அருகே மின்கம்பி தாழ்வாக தொங்கியதால்  சென்னை, நெல்லை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:16:38+05:30)

ஆறுமுகநேரி அருகே மின்கம்பி தாழ்வாக தொங்கியதால் சென்னை, நெல்லை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அருகே மின்கம்பி தாழ்வாக தொங்கியதால் சென்னை, நெல்லை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. சுமார் 1½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

அறுந்து கிடந்த மின்கம்பி

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் வரை ரெயில் போக்குவரத்திற்காக மின்மயமாக்கல் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மின்கம்பங்கள், மின்கம்பிகள் அமைக்கும் பணி ஆறுமுகநேரி-குரும்பூர் இடையே நாககன்னியாபுரம்-மூலக்கரை ரெயில்வே கேட் பகுதியில் நடந்து வருகிறது.

இந்த வழியாக தினமும் செந்தூர் எக்ஸ்பிரஸ், நெல்லை-திருச்செந்தூர் பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

நடுவழியில் நிறுத்தம்

இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் செந்தூர் எக்ஸ்பிரஸ் நேற்று காலையில் ஆறுமுகநேரி அருகே நாக கன்னியாபுரம்-மூலக்கரை ரெயில்வே கேட் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது, ரெயில் தண்டவாள பகுதியில் மின்சார கம்பி மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டு இருந்தது. இதை பார்த்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நடுவழியில் நிறுத்தினார்.

அதே நேரத்தில் திருச்செந்தூரில் இருந்து நெல்லை செல்லும் பயணிகள் ரெயில் காலை 7.25 மணிக்கு ஆறுமுகநேரி ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

1½ மணி நேரம் தாமதம்

மின்சார கம்பிகள் தாழ்வாக தொங்கி கிடந்தது குறித்து உடனடியாக ெரயில்வே அதிகாரிகளுக்கும், மின்ஒயர் மாட்டும் ஒப்பந்ததாரருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து மின் கம்பியை சரிசெய்தனர்.

இதனால் சுமார் 1½ மணி நேரம் தாமதமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றது. இதேபோல் ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் நின்ற திருச்செந்தூர்-நெல்லை பயணிகள் ரெயிலும் 1½ மணி நேரம் தாமதமாக நெல்லைக்கு புறப்பட்டு சென்றது.

பயணிகள் அவதி

மேலும் நெல்லையில் இருந்து காைல 7.15 மணிக்கு திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்ற ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 9.30 மணிக்கு ஆறுமுகநேரிக்கு சென்று சேர்ந்தது. அங்கிருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்டது.

இந்த ரெயில்களின் காலதாமதத்தால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.


Next Story