கோடை விடுமுறை முடிந்ததால் ரெயில், பஸ்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்


கோடை விடுமுறை முடிந்ததால்  ரெயில், பஸ்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
x

கோடை விடுமுறை முடிந்ததையொட்டி மதுரை ரெயில், பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

மதுரை


கோடை விடுமுறை முடிந்ததையொட்டி மதுரை ரெயில், பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கோடை விடுமுறை

தமிழகத்தில் கோடை விடுமுறையையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால், வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு கோடை விடுமுறையை கொண்டாட வந்திருந்தனர். இதற்கிடையே, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் அனைத்தும் வருகிற 7-ந்தேதி திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து சொந்த ஊரில் உள்ள மக்கள், தங்களது இருப்பிடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவர்கள் சென்னை, பெங்களூரு, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்வதற்காக காத்திருந்தனர்.

இந்த விடுமுறை தினத்தை விட்டு விட்டால் மற்ற நாட்களில் செல்வதற்கு சிரமமாக இருக்கும் என்பதால் ஏராளமானவர்கள் மதுரை ரெயில் நிலையத்தில் நேற்று அதிக அளவில் படை எடுத்திருந்தனர். குறிப்பாக வட மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் செல்ல அதிக பயணிகள் காத்திருந்தனர். முன்பதிவில்லா பெட்டிகளில் மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. ரெயிலில் தங்களுக்கான இடத்தை பிடிப்பதற்காக ஒவ்வொரு ரெயிலிலும் மக்கள் முண்டியடித்து ஏறியதை காணமுடிந்தது.

பஸ் நிலையங்கள்

ரெயில் நிலையம் மட்டுமின்றி மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்களின் வசதிக்காக மதுரையில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவை, சென்னை போன்ற நகரங்களுக்கு பகல் நேரத்தை காட்டிலும் இரவு நேரத்தில் அதிக பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.


Next Story