நீர்மட்டம் 137.50 அடியை எட்டியதால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு உபரிநீர் திறப்பு


நீர்மட்டம் 137.50 அடியை எட்டியதால்  முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு உபரிநீர் திறப்பு
x

நீர்மட்டம் 137.50 அடியை எட்டியதால் ‘ரூல் கர்வ்' விதிப்படி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு உபரிநீர் திறக்கப்பட்டது.

தேனி

முல்லைப்பெரியாறு அணை

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 142 அடி வரை நீர் தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

இந்த அணையில் பருவமழை காலத்துக்கு ஏற்ப நீர்மட்ட உயர்வை நிர்ணயிக்கும் 'ரூல் கர்வ்' விதி கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்த விதிப்படி பருவமழைக் காலங்களில் எந்தெந்த தேதிகளில் அணையில் எவ்வளவு நீர் தேக்கிக் கொள்ளலாம் என்ற அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அட்டவணைப்படி நீர் தேக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்டு 10-ந்தேதி வரை அணையில் 137.5 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வந்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 135.15 அடியாக இருந்தது. அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,866 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

நள்ளிரவில் பெய்த பலத்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 136.95 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,200 கன அடியாக இருந்தது. இதனால் தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 2,160 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

கேரளாவுக்கு நீர் திறப்பு

தொடர்ந்து நீர்வரத்து அதிக அளவில் இருந்ததால் பகல் 1 மணியளவில் அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டியது. இதையடுத்து 'ரூல் கர்வ்' விதிப்படி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு உபரிநீர் திறக்கப்பட்டது. அணையின் செயற்பொறியாளர் சாம்இர்வின் முன்னிலையில், அணையில் உள்ள 13 மதகுகளில் 3 மதகுகள் 30 செ.மீ. உயரம் திறக்கப்பட்டு, வினாடிக்கு 534 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் மாலை 4 மணியளவில் அணையில் இருந்து மேலும் 3 மதகுகள் சுமார் 30 செ.மீ. உயரம் திறக்கப்பட்டு வினாடிக்கு 534 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து மாலை 5 மணியளவில் மேலும் 4 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அணையில் இருந்து மொத்தம் 10 மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 1,876 கன அடி வீதம் கேரளாவுக்கு உபரி நீர் வெளி யேற்றப்படுகிறது.

முன்கூட்டியே தகவல்

இதுகுறித்து இடுக்கி மாவட்ட நிர்வாகத்துக்கு முன்கூட்டியே தகவல் கொடுக்கப்பட்டு, பின்னரே நீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் வல்லக்கடவு, வண்டிப்பெரியார், சப்பாத்து வழியாக இடுக்கி அணைக்கு செல்கிறது. இந்த ஆறு வினாடிக்கு சுமார் 80 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் செல்ல ஏதுவானது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் மற்றும் ஆற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இடுக்கி மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.


Next Story