ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடாது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அறிவுறுத்தல்
ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு புதிதாக வழக்கு தொடர தேவையில்லை என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு புதிதாக வழக்கு தொடர தேவையில்லை என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ஆடல், பாடல் நிகழ்ச்சி
மதுரை ஐகோர்ட்டு எல்லைக்கு உட்பட்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் திருவிழாக்களையொட்டி ஆடல்-பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிடக்கோரி ஏராளமான மனுக்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
மேலும் சில வக்கீல்கள் இதுதொடர்பான வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கேட்டும் முறையிட்டனர். இந்த மனுக்கள், முறையீடுகள் அனைத்தும் நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது நீதிபதிகள், ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை கடந்த வாரம் விடுமுறை கால கோர்ட்டில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா ஆகியோர் விசாரித்து, மிகத்தெளிவான உத்தரவை பிறப்பித்து உள்ளனர்.
7 நாளில் பரிசீலனை
அந்த உத்தரவில், ஆடல்-பாடல், கரகாட்டம், கலாசார நாடகம் போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி போலீஸ் நிலையத்தில் மனு அளித்தால், அதை 7 நாட்களுக்குள் காவல் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை என்றால் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும்.
மேலும் ஆடல்-பாடல், கரகாட்டம், நாடக நிகழ்ச்சிகளில் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளன. அதனை முழுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த உத்தரவே போதுமானது. இனி இது தொடர்பாக புதிய வழக்கு தாக்கல் செய்து, அதில் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய தேவை இல்லை. எனவே இந்த உத்தரவை தமிழக அரசும், காவல்துறையும் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியதுடன், புதிய வழக்கு தாக்கல் செய்ய தேவை இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.