ரதசப்தமியை முன்னிட்டு 7 குதிரைகள் வைத்து அஸ்வமேத பூஜை


ரதசப்தமியை முன்னிட்டு 7 குதிரைகள் வைத்து அஸ்வமேத பூஜை
x

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ரதசப்தமியை முன்னிட்டு 7 குதிரைகள் வைத்து அஸ்வமேத பூஜை நடந்தது.

ராணிப்பேட்டை

வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் முரளிதர சுவாமிகளின் தலைமையில் பல்வேறு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 27 நட்சத்திரக்காரர்கள் நலன் கருதியும், ராஜ யோகங்கள் கிடைக்க, ஸ்திரி சாபம், பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட, தொழில், வாகனம் கிடைத்திட, அரசியல், அரசாங்கம், சினிமா, வர்த்தம் போன்றவற்றில் அதிக லாபம் பெற்றிட, எதிரிகள் தொல்லை அகல, போட்டி பந்தயங்களில் வெற்றி பெற்றிட, காரியத்தடை அகன்று பல்வேறு நன்மைகள் கிடைத்திட வேண்டி 7 குதிரைகள் வைத்து அஸ்வமேத பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு 7 குதிரைகள் அலங்கரிக்கப்பட்டு தன்வந்திரி பீடம் வளாகத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பின்னர் பீடாதிபதி முரளிதர சுவாமிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

முன்னதாக கணபதி பூஜையுடன் ஹோமம் நடைபெற்றது. பின்னர் அலங்கரித்து அழைத்து வரப்பட்ட 7 குதிரைகளுக்கும் தனித்தனியாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உணவு வழங்கப்பட்டது.

தொடர்ந்து தரிசனத்திற்கு வந்திருந்த பக்தர்கள் முரளிதர சுவாமிகள் முன்னிலையில் குதிரைகளுக்கு மலர்கள் தூவி, பூஜை செய்து வழிபட்டனர். அதன் பின்னர் சிறப்பு பூஜைகளுடன் லட்ச அஸ்வாரூடா ஜப ஹோமம் நடைபெற்றது. அஸ்வமேத பூஜை மற்றும் ஹோமங்களில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பீடாதிபதி முரளிதர சுவாமிகள் பிரசாதமும் ஆசியும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

மேலும் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 21 அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல்கருடர் பிரதிஷ்டை செய்யப்பட்டதின் வருஷாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக கருடபகவானுக்கு பல்வேறு ஹோம திரவியங்களை கொண்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னர் பீடாதிபதி முரளிதர சுவாமிகள், விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நேற்று மதியம் 1 மணிக்கு அஸ்வாரூடா ஹோமம், மஹா பூர்ணாஹூதி, பஞ்சமுக வராஹிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Next Story