மதுகுடிக்க பணம் கேட்டு கட்டிட தொழிலாளி மீது தாக்குதல்
சாத்தான்குளம் அருகே மதுகுடிக்க பணம் கேட்டு கட்டிட தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தட்டார்மடம்;
மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியை சேர்ந்த தங்கம் மகன் செந்தில்வேல் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சாத்தான்குளத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். சாத்தான்குளம் அருகே ஆத்துபாலம் அருகில் சென்றபோது சாத்தான்குளம் ஆர்.சி. வடக்கு தெரு ஆறுமுகம் மகன் சந்துரு, லிங்கம் மகன் அழகு, சடையன்கிணறு இசக்கிமுத்து மகன் ஆகாஷ் (22)ஆகிய 3 பேரும் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள், செந்தில்வேலிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் பீர் பாட்டிலால் அவரை தாக்கினர். பின்னர் அவரை மோட்டார் சைக்கிளில் இருந்து இழுத்து சென்று அருகில் உள்ள கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் வழக்குப்பதிவு செய்து, ஆகாஷை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் சாத்தான்குளம் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.