மோட்டார் சைக்கிளில் வந்தவர் படுகொலை
சோழவந்தான் அருகே ஜாமீனில் வந்தவரை காரை மோதவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர் படுகொலை செய்யப்பட்டார்.
சோழவந்தான், ஜூலை.1-
சோழவந்தான் அருகே ஜாமீனில் வந்தவரை காரை மோதவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர் படுகொலை செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்தார்
மதுரை மாவட்டம் திருமங்கலம் லட்சுமிநகரை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் குண்டாறு என்ற சக்திவேல் (வயது 37). இவர் மீது 4 கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் உள்ளன.
இந்தநிலையில் நேற்று மதியம் மதுரை மத்திய சிறையில் இருந்து சக்திவேல் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் தனது உறவினரின் மோட்டார் சைக்கிளில் மதுரையில் இருந்து மேலகால் வழியாக திருமங்கலத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
காரை மோதவிட்டு..
மேலகால் அருகே கணவாய் கருப்புக்கோவில் அருகே மாலை 5.30 மணி அளவில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து சக்திவேல் கீழே விழுந்தார்.
அப்போது காரில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் கீழே இறங்கி கும்பல் சக்திவேலை நோக்கி கொலை வெறியுடன் சென்றது. இதை பார்த்ததும் அவர் உயிரை காப்பாற்றி கொள்ள பதறியடித்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்த கும்பல் அவரை விரட்டி சென்று சரமாரியாக பட்டாகத்தி, கொடுவாளால் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் இறந்தார். பின்னர் அந்த கும்பல் தாங்கள் வந்த காரில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டது. அப்போது சக்திவேலின் மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்று விட்டனர்.
பழிக்கு பழி நடந்த கொலையா?
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், காடுபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலையான சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். கொலை செய்யப்பட்ட சக்திவேல் கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தன்தரைகோட்டை பகுதியில் ஸ்டீபன் என்பவரை தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளார். இந்த நிலையில் மதுரை சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டு உள்ளார். இதனால் இது பழிக்குப்பழியாக நடந்த கொலையாக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். சக்திவேலை கொன்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.