காண்டிராக்டர் மீது தாக்குதல்; 5 பேருக்கு வலைவீச்சு


காண்டிராக்டர் மீது தாக்குதல்; 5 பேருக்கு வலைவீச்சு
x

ஏர்வாடி அருகே காண்டிராக்டரை தாக்கியதாக 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

மாவடி நெரிஞ்சிவிளையை சேர்ந்தவர் பவுல் மகன் பன்னீர்செல்வம் (வயது 40). கட்டிட காண்டிராக்டர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு மலையடிபுதூரை சேர்ந்த செல்லத்துரை மகன் சாமுவேல் (20) வேறு ஒருவரின் தோட்டத்தில் அனுமதி இன்றி பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பன்னீர்செல்வம், சாமுவேலை கண்டிக்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சாமுவேல், பன்னீர்செல்வத்துக்கு போன் செய்து, கட்டுமான பணி உள்ளது என்றும், அதுபற்றி பேச ராஜபுதூர் ஊருக்கு தென்புறமுள்ள பாலத்திற்கு வருமாறும் கூறி அழைத்துள்ளார். இதையடுத்து பன்னீர்செல்வம் அங்கு சென்றார். அப்போது அங்கிருந்த சாமுவேல் உள்பட 5 பேர் சேர்ந்து, பன்னீர்செல்வத்தை தாக்கி, கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பன்னீர்செல்வம் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து சாமுவேல் உள்பட 5 பேரையும் தேடி வருகிறார்.


Next Story