தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்
தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்கிய வேட்டை தடுப்பு காவலர் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அணிக்கொரை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 22). இவர் தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் ஊட்டியில் இருந்து அணிக்கொரை செல்வதற்காக மார்லிமந்து செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த ஸ்கூட்டி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நாகராஜ் காயமடைந்தார். பின்னர் இருதரப்பிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது ஸ்கூட்டியில் வந்த பெண் உள்பட 3 பேர், நாகராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்து நாகராஜ் புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நாகராஜை தாக்கியது கடநாட்டை சேர்ந்த மணிகண்டன் (29), ஊட்டி பசுவையா நகரை சேர்ந்த சத்தியவாணி, விஷ்ணு என்பது தெரியவந்தது. இதில் மணிகண்டன் தற்காலிக வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிவதும், மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.