தாய்-மகன் மீது தாக்குதல்; ஒருவர் கைது
தாய்-மகன் மீது தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் கணேசமூர்த்தி(வயது 33). இவரது குடும்பத்திற்கும், இவரது பெரியப்பா மகாலிங்கம் குடும்பத்திற்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று மகாலிங்கத்தின் மருமகனான உதயநத்தத்தில் வசித்து வரும் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தோப்பு தெருவை சேர்ந்த வீரப்பன் மகன் கந்தன்(40) என்பவர், மகாலிங்கத்திடம் ஏன் அடிக்கடி பிரச்சினை செய்கிறீர்கள் என்று கூறி கணேசமூர்த்தியின் வீட்டின் முன்பு நின்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை தட்டி கேட்ட கணேசமூர்த்தியை, கந்தன் தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் கணேசமூர்த்திக்கு வலது கண்ணில் காயம் ஏற்பட்டது. அப்போது சத்தம் கேட்டு அங்கு வந்த கணேசமூர்த்தியின் தாய் அம்பிகா (67) தகராறை தடுக்க முயன்றார். அப்போது கந்தன், அம்பிகாவை அருகில் இருந்த உருட்டுக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கந்தன், கணேசமூர்த்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இ்ந்த சம்பவத்தில் காயமடைந்த கணேசமூர்த்தி மற்றும் அவரது தாய் அம்பிகா ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கணேசமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து கந்தனை கைது செய்தார்.