மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றவர்களை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்


கரூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றவர்களை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டரை வாலிபர்கள் தாக்கியதால் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்

பிறந்தநாள் விழா

கரூர் மாவட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில் ஆண்டுதோறும் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளையொட்டி கரூர் ஜவகர் பஜாரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் இருந்து தேவராட்டம் ஆடி மனோகரா கார்னரில் வைக்கப்பட்டிருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

நேற்று வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்தநாள் விழாவையொட்டி பண்பாட்டு கழகம் சார்பில் ஜவஹர் பஜாரில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து தேவராட்டம் ஆடிக்கொண்டு 100-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஊர்வலமாக சென்றனர்.

போக்குவரத்து நெரிசல்

அப்போது ஊர்வலத்தில் சென்ற வாலிபர்கள் பலர் மோட்டார் சைக்கிள்களில் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு திரிந்ததால் கோவை ரோடு, ஜவகர் பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மனோகரா கார்னரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செல்வதற்கு அனுமதி இல்லை எனவும், எனவே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஊர்வலமாக செல்லுமாறும் கூறியுள்ளனர்.

ஆனால் சில வாலிபர்கள் போலீசாரின் அறிவுரையை மீறி மோட்டார் சைக்கிளில் சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பானுமதி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி மோட்டார் சைக்கிளின் சாவியை எடுக்க முயன்றதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் சிலர் சாவியை எடுக்க விடாமல் சப்-இன்ஸ்பெக்டர் பானுமதி கையைப்பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

போலீசார் தடியடி

இதில், சப்-இன்ஸ்பெக்டருக்கு கையில் காயம் ஏற்பட்டு உள்ளது. அப்போது போலீசாருக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அப்பகுதிக்கு கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். மேலும் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் வாலிபர்கள் அங்கிருந்து சிதறி நாலாபுறமும் ஓடினர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சுக்காலியூர் பகுதியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story