பெண் மீது தாக்குதல்:அரசு பஸ் கண்டக்டர்- தாய் மீது வழக்கு
தேனி அருகே பெண் மீது தாக்குதல் நடத்திய அரசு பஸ் கண்டக்டர், அவரது தாய் மீது போலீீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி அருகே வீரபாண்டியை சேர்ந்தவர் ஆனந்தஜோதி (43). இவர் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில், 'எனக்கு 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரும், நானும் 2005-ம் ஆண்டில் இருந்து பிரிந்து வாழ்கிறோம். இந்நிலையில், போடேந்திரபுரம் விலக்கு பகுதியை சேர்ந்த சுதாகரன் (45) என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றார். திருமணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக கூறினார்.
பின்னர் அவருக்கும் எனக்கும் 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. முதலில் கம்பத்திலும், பின்னர் வீரபாண்டியிலும் வசித்து வந்தோம். சுதாகரன் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்த விவரம் தெரியவந்தது. அதன்பிறகு, சுதாகரன் தனது தாயாரின் பேச்சைக் கேட்டு என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். அவருடைய தாய் மாரியம்மாளும் எனக்கு செல்போன் மூலம் பேசி மிரட்டினார்' என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில், சுதாகரன், மாரியம்மாள் ஆகிய 2 பேர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலரம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.