டாஸ்மாக் பாரில் தொழிலாளி மீது தாக்குதல்; வாலிபர் கைது
கோவில்பட்டி அருகே டாஸ்மாக் பாரில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே டாஸ்மாக் பாரில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
தொழிலாளி மீது தாக்குதல்
கோவில்பட்டியை அடுத்துள்ள கீழப்பாண்டவர்மங்கலம் தெற்கு காலனியை சேர்ந்தவர் மாடசாமி மகன் சக்திவேல் (வயது 45). இவர் நேற்று முன்தினம் இரவு பசுவந்தனை ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் இவரிடம் தகராறு செய்து பாட்டில் மற்றும் நாற்காலிகளால் தாக்கியது. இதை தடுக்க வந்தவர்களை அந்த கும்பல், அரிவாளை காட்டி மிரட்டி விட்டு தப்பி ஓடியது.
வாலிபர் கைது
இந்த சம்பவம் பற்றி கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காயம் அடைந்த தொழிலாளி சக்திவேல், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன், அமல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மறவன் மடம் கிராமத்தைச் சேர்ந்த நாகூர் பாண்டியன் (22) என்பவரை கைது செய்தனர். மேலும் அவருடன் வந்த 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.