வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்; நண்பர்கள் 2 பேர் கைது
சாயர்புரத்தில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாயர்புரம்:
சாயர்புரம் மெயின் ரோடு நடுவகுறிச்சி பகுதியைச் சேர்ந்த ராஜகுமார் மகன் பொன்சீலன் (வயது 23). அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாயர்புரம் இருவப்பபுரம் சந்திப்பு பகுதியில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பொன்சீலனின் மற்றொரு நண்பர்களான தூத்துக்குடி புதுக்கோட்டை பிரகாஷ்நகர் பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் அழகுமுத்து (23), சாயர்புரம் காமராஜர் நகரைச் சேர்ந்த கருவேலமணி மகன் ஞானராஜ் (21) ஆகியோர் பொன்சீலனிடம் புத்தாண்டை முன்னிட்டு செலவுக்கு பணம் கேட்டுள்ளனர்.
அதற்கு பொன்சீலன் பணம் இல்லை என்றதும் ஆத்திரமடைந்த அழகுமுத்து, ஞானராஜ் ஆகியோர் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பொன்சீலன் நேற்று சாயர்புரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து அழகுமுத்து, ஞானராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தார். அழகுமுத்து மீது ஏற்கனவே ஆத்தூர், புதுக்கோட்டை போலீசில் ஒரு வழக்கும், ஞானராஜ் மீது புதுக்கோட்டை போலீசில் கஞ்சா வழக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.