சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டம்
கரூரில் நேற்று சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் அமராவதி ஆறு தடுப்பணை, புகழிமலையில் அந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வு கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக்கணக்கு குழுத்தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், குழு உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) எஸ்.காந்திராஜன் (வேடசந்தூர்), பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர்), வேல்முருகன் (பண்ருட்டி) மற்றும் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் தணிக்கை பத்திகள் தொடர்பாக மாசு கட்டுபாட்டு வாரியம், வணிக வரித்துறை, தொல்லியல் துறை, எரிசக்தி துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்பு துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் விளக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பேட்டி
பின்னர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக்கணக்கு குழுத்தலைவர் செல்வபெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், 2019-20, 2015-18, 2014-15, 2020-21 கடந்த காலங்களில் நடந்ததை எல்லாம் இப்பொழுது தணிக்கை துறை சுட்டி காட்டி இருக்கின்றது. அதன் அடிப்படையிலே இந்த ஆய்வினை மேற்கொண்டு இருக்கின்றோம். அதற்காக அலுவலர்கள் பதிலளித்திருக்கின்றனர். துறை சார்ந்த பதில் எல்லாம் சென்னையில் உள்ள பொது கணக்கு குழு கண்காணிப்பாளரிடம் பரிசீலினை செய்து முடிவு எடுக்கப்படும், என்றார்.
நீரின் மாசு குறித்து பரிசோதனை
முன்னதாக கரூர் பெரியார்நகர் பகுதியில் இயங்கிவரும் தனியார் சாயத்தொழிற்சாலைகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி பணிகள் நடைபெற்று வருகிறதா என்பதையும், பெரியார் நகர் பகுதியில் உள்ள அமராவதி ஆற்று தடுப்பணையில் நீர்கள் சேகரித்து நீரின் மாசு குறித்து பரிசோதனை செய்து ஆய்வு மேற்கொண்டு நீரின் மாசு குறைவாக உள்ளதை உறுதி செய்தனர். மேலும், வேலாயுதம்பாளையம் புகழிமலையில் தொல்லியல் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் 1-ம், 2-ம் மற்றும் 3-ம் நூற்றாண்டு சமணர் படுக்கை மற்றும் கல்வெட்டுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பெண்கள் விடுதியில் ஆய்வு
பின்னர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கல்லூரி பெண்கள் விடுதியினை ஆய்வு மேற்கொண்டு கழிவறை, படுக்கை மற்றும் சுற்றுப்புறங்களை பார்வையிட்டு மாணவிகளிடம் விடுதிகளின் செயல்பாடுகள், உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். விடுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நிவர்த்தி செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். பின்னர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுத்திட்டங்கள் சாராத செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்களான நிமிர்ந்து நில் துணிந்து சொல், இளந்தளிர் இல்லம், அகல்விளக்கு, பள்ளிக்கூடம் மணியடிச்சாச்சு, தங்கத்தந்தை திட்டம், விடியல் வீடு, அரண், கரூர் கோழி, பாலம், கலங்கரை விளக்கம், பொக்கிஷம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டு கண்காட்சி அரங்கினை பார்வையிட்டனர்.
நொய்யல்
புகழிமலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சமணர் படுகைகளை தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புகழிமலையின் மேல் உள்ள 2000 ஆண்டுகள் பழமையான பிராமி கல்வெட்டுகள் மற்றும் சமணர் படுகைகள் குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கம் அளித்தனர். மேலும் எவ்வாறு கல்வெட்டு படி எடுப்பது என்பது குறித்த செய்முறை விளக்கமும், பிராமி எழுத்துக்களை எவ்வாறு படிப்பது என்பன குறித்த விளக்கமும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. சேரர்களின் தலைநகரமாக கரூர் மாவட்டம் இருந்ததற்கான சான்றுகள் இந்த கல்வெட்டில் இருப்பதாக கூறினார்கள். ஆய்வின்போது புகழூர் நகராட்சித்தலைவர் சேகர் என்கிற குணசேகரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.