அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு;அமலாக்கத்துறை மனு விசாரணை தள்ளிவைப்பு


அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு;அமலாக்கத்துறை மனு விசாரணை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை மனு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.4 கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது 2006-ம் ஆண்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று கோரி அமலாக்கத்துறை சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. கடந்த மாதம் 19-ந் தேதி சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறையின் சார்பில் ஆஜரான வக்கீல், வழக்கில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு உதவுவதற்காக அமலாக்கத்துறையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

ஆனால் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் ஆஜரான வக்கீல் இதனை ஏற்க மறுத்து விட்டார். அதாவது, இந்த வழக்கு விசாரணை சுமார் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. இதனால் அமலாக்கத்துறை உதவி தேவையில்லை என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதி செல்வம், வழக்கு விசாரணையை ஆகஸ்டு 2-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதன்படி, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செல்வம் விடுமுறை என்பதால், பொறுப்பு நீதிபதி சுவாமிநாதன் இந்த வழக்கு மீதான விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.


Next Story