மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யஎலக்ட்ரீசியனிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது
கடலூரில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய எலக்ட்ரீசியனிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் கம்மியம்பேட்டையை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 49). எலக்ட்ரீசியனான இவர், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள 2 கடைகள் மற்றும் 2 வீடுகளில் ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரிக் வேலை பார்த்து வருகிறார். அப்போது அந்த கடைகள் மற்றும் வீடுகளின் உரிமையாளர் தனது மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக கூறி, அதற்கு கட்டணம் செலுத்திய ரசீது மற்றும் விண்ணப்பத்தை செல்வக்குமாரிடம் கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட செல்வக்குமார், திருப்பாதிரிப்புலியூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று, உதவி மின் பொறியாளர் சசிக்குமாரிடம் (45), மின் இணைப்பு பெயர் மாற்றம் தொடர்பாக விவரம் கேட்டுள்ளார். அப்போது அவர் ஒரு மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்ய லஞ்சமாக ரூ.10 ஆயிரம் கொடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.
அதற்கு செல்வக்குமார், அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை, அதனால் தொகையை குறைக்கும்படி கூறியுள்ளார். உடனே சசிக்குமார், பெயர் மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் கேட்டுள்ளார். இருப்பினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வக்குமார், இதுபற்றி கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கூறிய அறிவுரையின்படி செல்வக்குமார் நேற்று காலை திருப்பாதிரிப்புலியூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த சசிக்குமாரிடம் ரூ.8 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், சசிக்குமாரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் புதுச்சேரி சண்முகாபுரத்தில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்தனர்.