வீட்டிற்குள் புகுந்து உதவி பேராசிரியையிடம் நகை பறிப்பு
காரியாபட்டி அருகே வீட்டிற்குள் புகுந்து உதவி பேராசிரியையிடம் நகை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே வீட்டிற்குள் புகுந்து உதவி பேராசிரியையிடம் நகை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உதவி பேராசிரியை
காரியாபட்டி அருகே உள்ள அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவில் தெற்குதெரு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி விக்னேஸ்வரி (வயது 25). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் கார்த்திக் தனது நண்பர்களுடன் அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டார். இதனால் விக்னேஸ்வரி இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு கதவை பூட்டாமல் தூங்கி விட்டார். இதையடுத்து நள்ளிரவு திடீரென வீட்டினுள் லைட் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து திடுக்கிட்டு விக்னேஸ்வரி எழுந்து பார்த்தார்.
நகை பறிப்பு
அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், வீட்டில் நுழைந்து இருப்பதை பார்த்து யார் நீ? என்று கேட்டபோது அந்த மர்மநபர் விக்னேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை அறுத்துக் கொண்டு, செல்போனையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார்.
பின்னர் விக்னேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் நகையை பறித்து கொண்டு ஓடிய மர்மநபரை விரட்டி சென்றுள்ளனர்.
ஆனால் அந்த மர்மநபர் அந்த பகுதியில் இருந்து வேகமாக தப்பி சென்று விட்டார். இதுகுறித்து விக்னேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.