கால்நடை உதவி ஆய்வாளர் பணி பயிற்சியை ஒத்திவைக்க வேண்டும் -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கால்நடை உதவி ஆய்வாளர் பணி பயிற்சியை ஒத்திவைக்க வேண்டும் -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கால்நடை உதவி ஆய்வாளர் பணி பயிற்சியை ஒத்திவைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த செல்வராணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவள். பட்டப்படிப்பை முடித்து உள்ளேன். கடந்த 2019-ம் ஆண்டில் 538 கால்நடை ஆய்வாளர் நேரடி நியமனத்துக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

ஆனால் திடீரென்று அந்த நேரடி தேர்வு நியமனத்தை ரத்து செய்தனர். இந்த சூழலில் கடந்த மாதம் 24-ந்தேதி காலியாக உள்ள கால்நடை உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு துறை ரீதியாகவும், வாரிசு வேலைக்காக காத்திருப்பவர்கள் என 121 பேரை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

ஒவ்வொரு பணி நியமனத்தின் போதும், மொத்த பணியிட நியமனத்தில் 5 சதவீதத்திற்குமேல் வாரிசு அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. கால்நடை உதவி ஆய்வாளர் பணி நியமனத்தில் இந்த விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளன.

எனவே மேற்கண்ட பணியிடங்களுக்கு துறை ரீதியாகவும், வாரிசு அடிப்படையிலும் பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும். விதிகளை பின்பற்ற தகுதியானவர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த பணி நியமனங்களில் கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கான 5 சதவீத உச்சவரம்பு மீறப்பட்டு இருப்பது மனுதாரர் தரப்பில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே இதுதொடர்பாக கடந்த மாதம் 24-ந்தேதி வெளியான அறிவிப்பின்படி கால்நடை உதவி ஆய்வாளர் பணி நியமனத்திற்காக துறை ரீதியாகவும், வாரிசு வேலை அடிப்படையிலும் தேர்வான நபர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை ஒத்திவைக்க வேண்டும். இந்த வழக்கு குறித்து கால்நடைத் துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு (10-ந்தேதி) ஒத்தி வைத்தார்.


Next Story