மண் கடத்தல் குறித்து புகார் அளித்ததாக கருதி தேமுதிக ஒன்றிய செயலாளர் மீது தாக்குதல் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு
வேப்பூர் அருகே மண் கடத்தல் குறித்து புகார் அளித்ததாக கருதி தே.மு.தி.க. ஒன்றிய செயலாளரை கும்பல் தாக்கியது. இந்த தாக்குதல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநத்தம்,
வேப்பூர் அருகே உள்ள ஏ.மரூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45), தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர். இவரது மனைவி நீலாமதி. இவர் ஊராட்சி மன்ற துணை தலைவியாக உள்ளார். சேகருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி(45) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் சத்தியமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏ.மரூர் கிராமத்தின் அருகில் கிராவல் மண் கடத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர், சத்தியமூர்த்திக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தாக்குதல்
இதற்கிடையே கிராவல் மண் கடத்தியது குறித்து சேகர் தான் புகார் அளித்திருப்பார் என கருதிய சத்தியமூர்த்தி, தனது ஆதரவாளர்களான சிவசக்தி, சிவப்பிரகாசம்(65), மணிகண்டன், பரசுராமன் உள்ளிட்டோருடன் சேர்ந்து சேகர் மற்றும் அவரது உறவினர்களை சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த சேகர் மற்றும் அவரது உறவினர்கள் ரவி மனைவி ராணி(47), சின்னசாமி மனைவி சுமதி(45) ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
6 பேர் மீது வழக்கு
இதுகுறித்த புகாரின் பேரில் சிவசக்தி, சத்தியமூர்த்தி, சிவப்பிரகாசம், மணிகண்டன், பரசுராமன் உள்ளிட்ட 6 பேர் மீது சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சத்தியமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள், சேகரை தாக்கும் வீடியோ வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.