திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் வானியல் பயிற்சி பட்டறை
திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் வானியல் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
திருச்சி,
திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில், உலக சிறுகோள்கள் தினத்தை முன்னிட்டு "வானியல் பயிற்சி பட்டறை" நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலர் முனைவர் கோ.மீனா தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், இயக்குநர் எஸ்.அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முதல்வர் எஸ்.பத்மா சீனிவாசன், டீன் ஆர்.கணேஷ், துணை முதல்வர்கள் ரேகா, ரேணுகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சிப் பட்டறையில் மாணவர்கள் கோளரங்கத்தில் வானில் உள்ள கோள்களையும், நிலா, சூரியன் மற்றும் பூமியை நிலா சுற்றி வருவதையும் தொலைநோக்கி மூலமாக கண்டு மகிழ்ந்தனர். பிறகு வானியல் பட்டறையில் சூரியனால் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் சூரியன் செப்டம்பர் 21 மற்றும் மார்ச் 21 ஆகிய இரு தினங்களில் மட்டும் சரியான கிழக்கு திசையில் உதயமாகும் மற்ற நாட்களில் வடக்கிழக்கு திசையிலோ, தென்கிழக்கு திசையிலோ உதிக்கும் என்பது மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
சூரியனின் பாகங்களை பற்றி மாணவர்களுக்கு செய்முறை பயிற்சியும் தண்ணீர் மூலம் ராக்கெட் பறப்பதையும் செய்துக் காண்பிக்கப்பட்டது. மாணவர்கள் ராக்கெட் பறப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து மாலை நேரம் நிலவில் எரிகல் விழுவதால் ஏற்படும் மேடு, பள்ளங்களை சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலமாக மாணவர்கள் பார்த்து மகிழ்ந்தனர். மேலும் நட்சத்திரக் கூட்டங்கள் வானில் இருப்பதை கண்டு ரசித்தனர்.