ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில்சுவாமி நம்மாழ்வார் தெப்ப உற்சவம்


தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சுவாமி நம்மாழ்வார் தெப்ப உற்சவம் நடந்தது.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு சுவாமி நம்மாழ்வார் தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பத்தில் 5 முறை வலம் வந்து சுவாமி நம்மாழ்வார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆதிநாதர் ஆழ்வார் கோவில்

நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசி திருவிழா கடந்த மார்ச் 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

விழா நாட்களில் தினமும் மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மார்ச் 5-ந்தேதி கருட சேவையும், மார்ச் 9-ந்தேதி திருத்தேரோட்டமும் விமரிசையாக நடைபெற்றது.

தெப்ப உற்சவம்

பத்தாம் திருவிழாவான நேற்று முன்தினம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் பொலிந்துநின்றபிரானை தெப்பத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் தெப்பத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், கோஷ்டி நடந்தேரியது.

சுவாமி நம்மாழ்வார்

மாலை 6 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியர்களுடன் பல்லக்கில் எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி நம்மாழ்வார் 5 முறை தெப்பக்குளத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த தெப்ப உற்சவத்தில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், கோவில் செயல் அலுவலர் அஜித், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story