அம்பலில், அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும்
தனியாரிடம் குறைந்த விலைக்கு பருத்தியை விற்பனை செய்வதால் அம்பலில், அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
திட்டச்சேரி:
தனியாரிடம் குறைந்த விலைக்கு பருத்தியை விற்பனை செய்வதால் அம்பலில், அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பருத்தி சாகுபடி
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதியில் விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். சில இடங்களில் பருத்தி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. சில இடங்களில் பூத்து காய் பிடிக்கும் நிலையில் உள்ளது.இந்த நிலையில் பல்வேறு இடங்களில் பருத்தி செடிகளில் இலைப்பேன் நோய் தாக்கப்பட்டுள்ளது. செடிகளில் சப்பாத்தி பூச்சி தாக்குதலால் பூக்கள் உதிர்ந்தும், காய்கள் கீழே கொட்டியும் பாதிக்கப்பட்டுள்ளன.
பூச்சி தாக்குதல்
இதுகுறித்து தென்பிடாகையை சேர்ந்த பருத்தி விவசாயி சுரேஷ் கூறுகையில், அம்பல், பொறக்குடி, போலகம், திருப்புகலூர், நெய்க்குன்னம், தெற்குலேரி, அண்ணா மண்டபம், ஆலத்தூர், வாழ்குடி, விற்குடி, நரிமணம், எரவாஞ்சேரி, புதுக்கடை, குருவாடி, பண்டாரவாடை, தென்பிடாகை, மானாம்பேட்டை, கிடாமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது பல இடங்களில் பருத்தி செடிகள் இலைப்பேன், சப்பாத்தி பூச்சி தாக்குதல், சப்பை கொட்டுதல் மற்றும் கடும் வெயிலின் தாக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
மேலும் எலிகளின் தொல்லையால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சிரமங்களுக்கிடையே சாகுபடி செய்த பருத்தியை அறுவடை செய்ய ஒரு கிலோவுக்கு ரூ.10 கூலியாக கொடுக்க வேண்டி உள்ளது. திருமருகல் பகுதியில் சீயாத்தமங்கை தவிர மற்ற இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இல்லை.
இதனால் விவசாயிகள் பருத்தியை தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, அம்பலில் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது என்றார்.