தூத்துக்குடி ஆவுடையார்புரத்தில்மாநகராட்சி அலுவலர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


தூத்துக்குடி ஆவுடையார்புரத்தில்மாநகராட்சி அலுவலர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஆவுடையார்புரத்தில் மாநகராட்சி அலுவலர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஆவுடையார்புரம் குடியிருப்பு பகுதியில் சுகாதார வளாகம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுகாதார வளாகம்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன்படி தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் ஆவுடையார்புரம் பகுதியில் சுகாதார வளாகம் கட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அந்த பகுதியில் கோவில் இருப்பதாலும், குடியிருப்புக்கு அருகில் இருப்பதாலும், அங்கு சுகாதார வளாகம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக மாநகராட்சி மேயர், ஆணையாளரிடமும் மனு கொடுத்து வந்தனர்.

மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும் இப்பகுதி மக்கள் நடத்தினர்.

பரபரப்பு

ஆனாலும் தொடர்ந்து சுகாதார வளாகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பேரில் நேற்று காலையில் பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்கள் வந்தனர். அப்போது அங்கு பொதுமக்கள் திரண்டு அலுவலர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதே போன்று பா.ஜனதா, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சி பிரமுகர்களும் அங்கு வந்து பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story